அன்பே சிவம்

எண்ணங்கள் தன் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பித்து விட்டன. 1968-1969  இந்த இரண்டு ஆண்டுகளிலும்தான் எத்தனை எத்தனை முயற்சிகள், எத்தனை எத்தனை சாதனைகள். நினைத்தாலே இனிக்கும் ஆண்டுகள் இவை.

நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். அப்பொழுது சீக்கிய குரு திரு குரு நானக் அவர்களின் 500 ஆவது பிறந்த நாள் வைபவம் வந்தது. எங்கள் தமிழ் ஆசிரியை, அதை ஒட்டி சென்னையில் இருக்கும் அனைத்து உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்காக  நடக்கப் போகும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிக்கு மாணவிகளின் பெயர்களைக் கேட்டு எழுதிக் கொண்டார்கள். 

நான் பேச்சுப் போட்டிக்குப் பெயர் கொடுத்தேன் மாணவிகள் அந்த முயற்சியில் மிகவும் ஆவலுடன் ஈடுபட்டிருந்தோம். இரண்டு தோழிகள் கட்டுரைப் போட்டிக்காக நிறைய  குறிப்பு எடுத்து மிக அழகிய தமிழில் கட்டுரை எழுதி இருந்தார்கள்.  ஆனால் எதோ தவிர்க்க முடியாத காரணத்தால் அவர்களால் போட்டியில் பங்கு பெற முடியவில்லை.
இருவரும் எனக்குத் தங்கள் கட்டுரைக்கான குறிப்புக்களைக் கொடுத்து பேச்சுப் போட்டிக்குத் திறம்படத் தயார் ஆகும்படி சொன்னார்கள்.

கொட்டும் மழை. ஊரெங்கும் பெய்த மழையில் எங்கும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது.  வீட்டில் அம்மாவிடம் கூறினால் எங்கே போட்டிக்குச் செல்ல அனுமதிப்பார்களோ அல்லது தடுத்து விடுவார்களோ என்ற பயம். "பொய்மையும் வாய்மையிடத்த"  என்ற குறளை நினைவில் கொண்டு வீட்டில் சொல்லிக்கொள்ளாமல், ஒரு தோழியின் உதவியுடன் போட்டி நடக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தேன்  

என்னுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது.  என்னை விடச் சற்று வயதில் சிறிய மாணவன் ஒருவன் சென்னையின் மிகப் பிரபலமான ஒரு பேச்சாளரைப்போலப் பேசி எல்லா நடுவர்களிடமிருந்தும் பலத்த கைத்தட்டல்களைப் பெற்றான்.

சிறிது நாட்கள் சென்றதும் போட்டியின் முடிவு தெரிந்தது. முதல் பரிசு, அந்தச் சிறுவனுக்குக் கிடைத்தது. நான் இரண்டாம் பரிசு பெற்றேன். பரிசளிப்பு விழா சென்னை பீச் ரோட்டில் இருந்த ஒரு பெரிய அரங்கில் நடந்தது. அரங்கத்தின் பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை. எனது தமிழ் ஆசிரியை எனக்குத் துணைக்கு வந்தார்கள். அப்போது சென்னையின் கவர்னராக இருந்த திரு பிரபுதாஸ் பட்வாரி கைகளால் அந்தப் பரிசு எங்களுக்கு வழங்கப் பட்டது.

அந்த மாணவனை மீண்டும் அந்தப் பேச்சைப் பேசச் சொன்னார்கள். அவன் மிக மிக அழகாகப் பேசிப் பலத்த கரவொலிகளைப் பெற்றான். அந்த அரங்கத்தில் மேடையில் அமர்ந்திருந்த பல பெரியோர்கள் அவனுக்கு நூறு ருபாய் நோட்டுக்களை வழங்கி அவனைத் திக்கு முக்காடச் செய்து விட்டனர்.


அதே பேச்சை நானும் எனது ஆசிரியர்கள் முன்னிலையிலும் பேசிக் காட்டினேன். தாயுமானவரின் பாடல் வரிகளான "அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே" என்பது எனது பேச்சின்  முத்தாய்ப்பு வாரியாக இருந்தது. எனது கணக்கு டீச்சர் "என்ன விஜயா,  உனது வாழ்க்கையிலும் இந்த வரிகளில் பொதிந்திருக்கும் அர்த்தத்தைக் கடைபிடிப்பாயா?  என்று கேட்டது இன்னும் எனது காதுகளில் ஒலிக்கிறது

Comments