வெண்ணிலவைத் தொட்டு



நிலவினைக் காட்டிக் காட்டிக் கதை சொல்லி, நித்தமும் நமக்கு   அமுது ஊட்டி வளர்த்தவர் அன்னை என்றால், நம் அறிவுப் பசிக்கு அமுது ஊட்டியவர்கள் நம் ஆசிரியர்கள் தானே!  பள்ளிக்கூடத்தில் நம் ஆசிரியர்கள் நம்மை ஊக்குவித்தது போல் யாருமே செய்திருக்க முடியாது என்பது திண்ணம்.

சென்னையில் நான் படித்த பள்ளி ஆசிரியை திருமதி ராஜாமணி அவர்கள் ஒருநாள் காலை வகுப்பிற்கு வந்தனர். முப்பத்து ஐந்து மாணவிகள் இருந்த வகுப்பு. வருடம் 1969.  ராஜாமணி டீச்சர் காலையில் ஆங்கில வகுப்பு எடுப்பார்கள். வந்தவுடனே, "எனது அருமை மாணவிகளே, அமெரிக்கா சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது. நீங்கள் எல்லோரும் நாசாவுக்கு கடிதம் எழுதி  நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் கையொப்பம் பெற்ற போட்டோ கேட்டு எழுதுங்கள்,” என்று கூறினார்.

சின்னஞ் சிறு வயது முதலே படிப்பைத் தவிர மற்ற கலைகள், என்னை மிகவும் ஈர்த்துள்ளன. கேட்கவும் வேண்டுமா?  அன்று மாலை வீடு  வந்தவுடன், பெற்றவர்களிடம் எப்படியோ மன்றாடி ஒரு அந்நிய நாட்டு அஞ்சல் கவர் வாங்கி  எனது பெரிய அண்ணாவின் உதவியுடன் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி தபால் பெட்டியில் சேர்த்தும் ஆயிற்று.  ஒரு கவர் வாங்கக் கூட மிகவும் யோசனை செய்யும் காலம் அது.

ஒரு நாள் மாலை வீடு வந்ததும் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. என் தாயார் ஒரு பெரிய கவரை என்னிடம் கொடுத்தார். நாசாவிலிருந்து வந்த கவர் அது. நெஞ்சு படபடக்கத் திறந்து பார்த்தால் அதில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் கையொப்பமிட்ட ஓர் பெரிய புகைப்படம், மற்றும் சந்திரனில் அவர்கள் இறங்கிய போது எடுத்த சில புகைப்படங்கள் இருந்தன.

இதைக் கண்டவுடன், முதன் முதலில் என் அன்புத் தோழி மாலினி வீட்டிற்கு ஓடினேன். அவளுடைய தந்தை, "என்னடி, ஆர்ம்ஸ்ட்ராங்கைதான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?", என்று கேலி செய்தார். அன்று அவர்கள் வீட்டில் எல்லோரும் செய்த குறும்பு, இன்றும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.

மறுநாள் காலை,  முதல் வகுப்பில் ராஜாமணி டீச்சரிடம் காண்பித்தேன்.  வகுப்பு முழுவதும் ஆச்சரியத்தில் மூழ்கியது. இன்னொரு முக்கிய சேதி.  என் ஒருத்தியைத் தவிர வேறு யாருமே நாசாவுக்கு எழுதவில்லை. மிக மிகக் கடினமான காரியமும் கைகூடும், மனதினில் ஊக்கம் இருந்தால், என்று சாதனை புரிந்து காட்டியது அமெரிக்கா. முதன் முதல் நிலவில் தனது பாதங்களைப் பதித்த பெருமை நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களைச் சாரும்.

பள்ளியில் எங்கள் உள்ளங்களில் ஊக்கமுடைமைக்கு வித்திட்டவர் எங்கள் ராஜாமணி டீச்சர். வெறும் ஏட்டுச் சுரைக்காய்க்கு மதிப்பு கொடுத்ததில்லை எங்கள் ஆசிரியர்கள். பேச்சுப் போட்டி, சித்திரம், இசை மற்றும் நாட்டியம் என்று அவர் அவர்கள் திறமையை மிக அன்போடு வெளிக் கொண்டு வந்து எங்களை அவர்கள் உற்சாகப் படுத்தியதை என்றும் என்னால் மறக்க முடியாது.


எப்பொழுதுமே மிகவும் அன்புடனும், கண்டிப்புடனும் எங்களை வளர்த்து ஆளாக்கிய எங்கள் ஆசிரியைகள் அனைவருக்குமே இந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதின் மூலம் எனது ஆழ்ந்த நன்றியையும் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் புகைப்படம் இன்றும் எங்கள் வீட்டை அலங்கரிக்கிறது.  

Comments